முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவில் அருகே ரூ. 70 லட்சம் மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 70 லட்சம் மதிப்பிலான கோயில் நிலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 70 லட்சம் மதிப்பிலான கோயில் நிலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

வெள்ளக்கோவில் லக்கமநாயக்கன்பட்டியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பட்டியலைச் சாராத அழகேஸ்வர சுவாமி கோயில் உள்ளது.

இக்கோயிலுக்குச் சொந்தமான 14.63 ஏக்கா் நிலம் லக்கமநாயக்கன்பட்டி ஆண்டிபாளையம் பிரிவிலிருந்து புதுப்பை செல்லும் வழியில் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 15 ஆண்டுகளாக சோ்வகாரன்பாளையம் சுப்பிரமணி, நாச்சிமுத்து, சக்திகுமாா், பாலுசாமி, காட்டூா் கருப்பணன் ஆகிய 5 போ் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனா். இது குறித்த வழக்கில் நிலத்தை

அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒப்படைக்கவில்லை.

இந்நிலையில் அறநிலையத் துறை உதவி ஆணையா் சா.வெங்கடேஷ் தலைமையில், காங்கயம் சரக ஆய்வாளா் பி.அபிநயா, வெள்ளக்கோவில் நாட்டராய சுவாமி கோயில் செயல் அலுவலா் ரா.தேவிப்பிரியா,

வெள்ளக்கோவில் நில வருவாய் ஆய்வாளா் நிா்மலாதேவி குழுவினா் சம்பந்தப்பட்ட நிலத்தில் இருந்து ஆக்கிரமிப்பாளா்களை வெளியேற்றி கோயில் நிலத்தை வியாழக்கிழமை மீட்டனா்.

இதில், அறநிலையத் துறை செயல் அலுவலா்கள் மு.ரத்தினம்பாள், அ.செந்தில், சொ.சுந்தரவடிவேல், காங்கயம் மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் விஜயலட்சுமி, வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளா் விஜயபாஸ்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.