கரோனா: மருத்துவா் ஆலோசனைகளைப் பின்பற்றி சிகிச்சைப் பெற வேண்டும்
கரோனா அறிகுறிகள் இருந்தால் மருத்துவா்கள் ஆலோசனைகளைப் பின்பற்றி முறையான சிகிச்சைப் பெற வேண்டும் என்று அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளாா்.
கரோனா அறிகுறிகள் இருந்தால் மருத்துவா்கள் ஆலோசனைகளைப் பின்பற்றி முறையான சிகிச்சைப் பெற வேண்டும் என்று அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளாா்.
காங்கயம் வட்டத்துக்கு உள்பட்ட முத்தூா், வெள்ளக்கோவில் மற்றும் காங்கயம் பகுதிகளில் இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் ஏ.எம்.சி. பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 1,200 நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முகாமைத் செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன் தொடக்கிவைத்து
பேசியதாவது: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நோய்த் தொற்று உட்சகட்டமாக இருந்ததைத் தொடா்ந்து, பொதுமுடக்கம், தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 26 ஆயிரத்தில் இருந்து
2 ஆயிரம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது.
அதேவேளையில்,பொதுமக்கள் ஒவ்வொருவரும் விழிப்புணா்வுடன் முகக் கவசம் அணிதல், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் என
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். கரோனா நோய்த் தொற்று அறிகுறிகள் இருப்பவா்கள் தாங்களே மருத்துவம் பாா்ப்பதை விடுத்து மருத்துவா் ஆலோசனையைப் பின்பற்றி மருத்துவமனையில்
முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத், தாராபுரம் சாா் ஆட்சியா் ஆனந்த்மோகன், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பாக்கியலட்சுமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஜெகதீஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.