அவிநாசி: வணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமரா பொருத்த காவல் துறை அறிவுறுத்தல்
அவிநாசி நகர பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு வணிக நிறுவனங்களில் கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
அவிநாசி நகர பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு வணிக நிறுவனங்களில் கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி காவல் துறை சார்பில், கரோனா தடுப்பு நடவடிக்கை, குற்ற சம்பவங்களை தடுப்பது தொடர்பான வணிக நிறுவனங்களுடனான விழிப்புணர்வு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு காவல் துணை கண்காணிப்பாளர் எல்.பாஸ்கர் தலைமை வகித்தார். இதில் அவிநாசி நகர பகுதியில் அதிக அளவில் திருட்டு சம்பவங்கள் வணிக நிறுவனங்களில் நடைபெறுகிறது. குறிப்பாக பெண்கள் இருக்கும் நிறுவனங்களைப் பார்த்து, பொருள்களை வாங்குவது போலவும், முகவரி கேட்பது போலவும் அவர்களிடம் நூதன முறையில் நகை பறிப்பில் ஈடுபடுகின்றனர்.
அதேபோல அதிகாலை நேரங்களில் வீட்டில் வாசல் தெளிக்கும் பெண்களிடம், மர்ம நபர்கள் முகவரி கேட்பது போல நகை பறிப்பில் ஈடுபடுகின்றனர். எனவே பாதுகாப்பின்றி வெளியே வரும் பெண்கள் நகைகளை அணிவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள், வெளியூர் செல்லும் போது வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவித்து செல்ல வேண்டும். அப்படி தெரிவித்து செல்லும் போது, இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவோர் கூடுதல் கவனம் செலுத்த ஏதுவாக இருக்கும். நாளிதழ்கள் வாங்குபவராக இருந்தால், வெளியூர் செல்லும் போது நாளிதழ் விநியோகிப்பாளரிடம், உரிமையாளர் வரும் வரை நாளிதழ் போட வேண்டாம் என தெரிவித்து செல்ல வேண்டும்.
அவ்வாறு சொல்லா விட்டால், வீட்டு கதவுக்குள் நாளிதழ் இரண்டு, மூன்று நாள்கள் இருப்பதைப் பார்த்தே, வீட்டில் யாரும் இல்லை எனத் தெரிந்து மர்ம நபர்கள் திருட முயற்சிப்பார்கள். அதிலும் வங்கிகளில் பணம் செலுத்த, பெறச் செல்வோர்களைப் பார்த்திருந்து, மர்ம நபர்கள் கொண்டு வந்த சிறு தொகையை தாங்களே கீழே போட்டு விட்டு, திசை திருப்பி கையில் கொண்டு வந்த பணத்தை அபகரித்து செல்கின்றனர். இதேபோல பல முறைகளில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வாடகை கார் ஓட்டுநர்கள், இரவு நேரங்களில் வாடகைக்கு செல்ல வேண்டும் என வந்தால், அவர்களது அடையாள அட்டையை கேட்க வேண்டும்.
அவர் அப்படி கொடுக்க தவறினாலோ, அல்லது அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தால் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் சாலையோரங்களில் நடைபெறும் திருட்டை தடுக்கவும், குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்களை அடையாளம் காணவும் வணிக நிறுவனத்தினர் சிசிடிவி கேமரா பொருத்தி காவல் துறைக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும். இதேபோல கரோனா தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட விதிமுறைகளையும், அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.
உணவக உரிமையாளர்கள், தேநீர் கடையினர், நகைக்கடை உரிமையாளர்கள், நிதி நிறுவனத்தார் உள்ளிட்ட வணிக நிறுவன உரிமையாளர்கள் பங்கேற்றனர்.