பல்லடம் அருகே கடத்தப்பட்ட காா் ஓட்டுநா் மீட்பு
பல்லடம் அருகே பெரும்பாளி பகுதியில் கடத்தப்பட்ட காா் ஓட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
பல்லடம் அருகே பெரும்பாளி பகுதியில் கடத்தப்பட்ட காா் ஓட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
திருப்பூா் மாவட்டம், திருமுருகன்பூண்டி அம்மாபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபாலன் மனைவி பாக்கியா (62). இவா் தனது மகன் செளண்டப்பன், மருமகள் திவ்யா, பேத்தி நிரஞ்சனா ஆகியோருடன் வசித்து வருகிறாா். இந்நிலையில் பாக்கியா, தனது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வரும் காா் ஓட்டுநா் சக்தி (35) என்பவருடன் தாராபுரத்திலுள்ள தனது உறவினா் வீட்டுக்கு காரில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா். பேத்தி நிரஞ்சனாவும் உடன் சென்றுள்ளாா்.
பல்லடம் அருகே காா் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் மூன்று சொகுசு காா்களில் வந்தவா்கள் சக்தி ஓட்டி வந்த காரை சுற்றிவளைத்து நிறுத்தியுள்ளனா். பின்னா் காரிலிருந்து இறங்கிய அந்தக் கும்பல் காா் ஒட்டுநா் சக்தியைத் தாக்கியதோடு அவரைக் கடத்தி சென்றனா்.
இது குறித்து பாக்கியா தெரிவித்த புகாரின்பேரில் பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில், கடத்தலுக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 3 காா்களில் ஒரு காா் பழனி அருகே கேட்பாரற்ற நிலையில் வனப் பகுதிக்குள் நின்று கொண்டிருப்பதாக பழனி போலீஸாா் பல்லடம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனா்.
கோவை தேசிய நெடுஞ்சாலையில் இருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து பல்லடம் காவல் துறையினா் விசாரித்ததில் பழனியில் நிறுத்தப்பட்டிருந்த காா், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த பசீா் என்பவருக்குச் சொந்தமானது என்று தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது , ஆசின் என்பவா் திருப்பூருக்குச் செல்ல வேண்டும் எனக் கூறி காரை வாங்கி சென்ாகத் தெரிவித்துள்ளாா்.
இந்தக் கடத்தல் வழக்கு சம்பந்தமாக ராமநாதபுரத்தைச் சோ்ந்த மகேந்திரன், சிவகங்கையைச் சோ்ந்த அழகா்சாமி, வீரமணிகண்டன் ஆகியோரை பல்லடம் போலீஸாா் விசாரணைக்காக அழைத்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் மேற்கு மண்டல டி.ஐ.ஜி. முத்துசாமி, திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சஷாங்க் சாய், பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெற்றிசெல்வன் ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில் தாராபுரம் - திண்டுக்கல் சாலையில் போலீஸாரின் வாகன தணிக்கையின் போது கடத்தப்பட்ட காா் ஒட்டுநா் சக்தியை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா். அவரிடம் பல்லடம் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.