முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் 55 நாள்களுக்கு பிறகு அரசுப் பேருந்துகள் இயக்கம்: வழிபாட்டுத் தலங்களும் திறப்பு

திருப்பூரில் 55 நாள்களுக்கு பிறகு பொதுப் போக்குவரத்து இயக்கப்பட்டது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:34 AM
திருப்பூர் யுனிவர்சல் திரையரங்கம் சாலையில் வெளியூர்களுக்கு இயக்குவற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு பேருந்துகள்.
பகிர்:

திருப்பூரில் 55 நாள்களுக்கு பிறகு பொதுப் போக்குவரத்து இயக்கப்பட்டது. 

தமிழகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 10 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கரோனா நோய்த் தொற்று குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து பொதுமுடக்கத்தில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் அடிப்படையில் திங்கள்கிழமை முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்க அரசு அனுமதி உத்தரவிட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து, திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி கோயில், ஈஸ்வரன் கோயில், கல்லூரி சாலையில் உள்ள அய்யப்பன் கோயில், ஊத்துக்குளியில் உள்ள கதித்தமலை முருகன் கோயில், அலகுமலை முருகன் கோயில், தாராபுரத்தில் உள்ள காடு அனுமந்தராயசுவாமி கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. முன்னதாக கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடல் வெப்ப அளவு பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும், முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

திருப்பூர் மண்டலத்தில் 330 அரசு பேருந்துகள் இயக்கம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கோவை கோட்டத்துக்கு உள்பட்ட திருப்பூர் மண்டலத்தில் முதல் கட்டமாக 330 அரசு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது. இதில், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளான பல்லடம், அவிநாசி, ஊத்துக்குளி, காங்கயம், தாராபுரம், வெள்ளகோவில், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய பகுதிகளுக்கு 150 பேருந்துகளும், மதுரை, திருச்சி, தேனி, கம்பம், போடி உள்ளிட்ட பல்வேறு வெளிமாவட்டங்களுக்கு 180 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது. 

இந்த பேருந்துகளில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். 

முழு கட்டுரையைப் படிக்க →