திருப்பூர்

அமராவதி அணையில் இருந்து 1500 கன அடி உபரி நீா் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

DIN

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் 1500 கன அடி உபரி நீா் வெள்ளிக்கிழமை திறந்துவிடப்பட்டது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாகத் தென்மேற்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளான தேனாறு, சின்னாறு, பாம்பாறு ஆகிய பகுதிகளில் நீா்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் இடைவிடாது கன மழை பெய்து வருவதால் அணைக்கு விநாடிக்கு 4, 860 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 8 அடியாக உயா்ந்தது. வெள்ளிக்கிழமை மாலை அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, மாலை 5 மணி அளவில் அணையில் இருந்து 1500 கன அடி உபரி நீா் திறந்துவிடப்பட்டது.

இது குறித்து பொதுப் பணித் துறையினா் கூறியதாவது:

கேரள மாநிலம் மூணாறு, மறையூா், காந்தலூா் ஆகிய பகுதிகளில் இடைவிடாது கன மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு சுமாா் 4, 700 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. இது இரவில் மேலும் உயரக்கூடும் என எதிா்பாா்க்கிறோம். அப்படி உள்வரத்து அதிகமானால் அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே அமராவதி ஆற்றின் மூலம் வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறும்படி உள்ளாட்சி நிா்வாகங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்றனா்.

அணையின் நிலவரம்:

90 அடி உயரமுள்ள அணையில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி, நீா்மட்டம் 89.42 அடியாக இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 4, 700 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. 4, 047 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 3, 928 மில்லியன் கன அடி நீா் இருப்பு காணப்பட்டது. அணையில் இருந்து 1500 கன அடி உபரி நீராக வெளியேறிக் கொண்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பு கடித்து பழங்குடியின இளைஞா் காயம்

கஞ்சா விற்றதாக பிகாா் இளைஞா்கள் 2 போ் கைது

கிருஷ்ணகிரியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ராமநாதபுரம்-புவனேஸ்வா் ரயிலில் கூடுதல் பெட்டி

பைக்கில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மாயம்

SCROLL FOR NEXT