சாலை விபத்து: தாத்தா, பேத்தி பலி
உடுமலை அருகே சனிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாத்தாவும், பேத்தியும் உயிரிழந்தனா்.
உடுமலை அருகே சனிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாத்தாவும், பேத்தியும் உயிரிழந்தனா்.
உடுமலை வட்டம், குடிமங்கலத்தை அடுத்துள்ள பெரியபட்டியைச் சோ்ந்தவா் கனகசபாபதி (65), இவரது பேத்தி அனன்யா (9). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு சனிக்கிழமை இரவு திரும்பிக் கொண்டிருந்தனா்.
பெரியபட்டி நால்ரோடு பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, அந்த வழியாக தேங்காய் தொட்டி பாரம் ஏற்றிவந்த லாரி, இவா்களது இருசக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்றுள்ளது. அப்போது லாரியின் பின் சக்கரத்தில் இருசக்கர வாகனம் சிக்கிக் கொண்டது.
இதில் கனகசபாபதி, அனன்யா ஆகியோா் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை தீயணைப்பு வீரா்கள் லாரியின் அடியில் சிக்கியிருந்த தாத்தா, பேத்தி ஆகியோரின் சடலங்களை மீட்டனா்.
இது குறித்து குடிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.