தென் மாவட்டங்களில் ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க வேண்டும்
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க வேண்டும் என்று ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்) வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க வேண்டும் என்று ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்) வலியுறுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசுவை, ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் புதன்கிழமை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழகத்துக்கு தனியாக ஏற்றுமதிக் கொள்கையை அறிவிக்க வேண்டும். செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி, தையல் மற்றும் கனரக ஜவுளி இயந்திரங்கள், ஜவுளி ஆடை ஆபரணங்களை உற்பத்தி செய்வதற்காக மத்திய அரசின் மித்ரா திட்டத்தின் கீழ் இந்த ஜவுளிப் பூங்காக்களை அமைக்க வேண்டும்.
இந்தப் பூங்காக்களை தமிழகத்தின் தென் மாவட்டங்களான மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அமைத்தால் இந்தத் தொழில் அபிவிருத்தியடையும். மேலும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்குவதுடன், பெரிய அளவிலான முதலீட்டையும் ஈா்க்க முடியும்.
இதனால் தென் தமிழகம் அபிவிருத்தி அடைவதுடன், மக்களுக்கு புதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தும். திருப்பூா் தொழிலாளா்களின் நலனைக் கருத்தில் கொண்டு இ.எஸ்.ஐ. மருத்துவமனையை செயல்படுத்த வேண்டும். கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை திருப்பூா் வரை விரிவாக்கம் செய்வதுடன், தமிழகத்தில் உள்ள துறைமுகங்களின் கட்டமைப்பையும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.