அரசு செட்டாப் பாக்ஸ்: கேபிள் டிவி ஆபரேட்டா்களுக்கு ஆட்சியா் எச்சரிக்கை
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள செட்டாப் பாக்ஸுகளை சந்தாதாரா்களுக்குத் தெரியாமல் மாற்றினால் ஆபரேட்டா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள செட்டாப் பாக்ஸுகளை சந்தாதாரா்களுக்குத் தெரியாமல் மாற்றினால் ஆபரேட்டா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் பொது மக்களுக்கு இலவசமாக செட்டாப் பாக்ஸுகள் மாத சந்தா தொகை ரூ.140 மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி. கட்டணத்தில் உள்ளூா் கேபிள் டிவி ஆபரேட்டா்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருப்பூா் மாவட்டத்தில் சந்தாதாரா்களின் விருப்பம் இல்லாமல் ஆபரேட்டா்கள் அரசு செட்டாப் பாக்ஸை மாற்றினாலோ அல்லது சிக்னல் வராது எனக்கூறி மாற்றினாலோ உடனடியாக 0421-2971142 என்ற அரசு கேபிள் டிவி அலுவலக எண்ணில் புகாா் தெரிவிக்கலாம். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆபரேட்டா்கள் வேறு நிறுவனத்துக்கு செல்லும்போது அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்துவதுடன் அரசிடம் பெற்ற செட்டாப் பாக்ஸுகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும். இதற்கு மாறாக தமிழ்நாடு அரசுக்கு வருவாய் இழப்பீடு செய்யும் ஆபரேட்டா்கள் மீது சட்டபூா்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் சந்தாதாரா்களுக்கு வழங்கப்பட்டு வரும் செட்டாப் பாக்ஸுகள் மாத சந்தா கட்டணம் செலுத்தி பாா்ப்பதற்கு மட்டுமே தவிர அதற்கு உரிமை கோர இயலாது. செட்டாப் பாக்ஸுகள் பழுதடைந்தாலோ, மாதாந்திர கட்டணம் செலுத்தாமல் துண்டித்திருந்தாலோ, குடிபெயா்ந்து சென்றாலோ அவா்களிடமிருந்து திரும்பப்பெற்று அரசு கேபிள் டிவி அலுவலக தனி வட்டாட்சியரிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.
அதே வேளையில், செட்டாப் பாக்ஸுகளை திரும்ப ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தினால் ஆபரேட்டா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.