பெயிண்டா் கொலை வழக்கு: ஒருவா் கைது
பல்லடம், சின்னூரில் பெயிண்டா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய சக தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பல்லடம், சின்னூரில் பெயிண்டா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய சக தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம், சின்னூரில் உள்ள தனியாா் நூற்பாலையில் பெயிண்டிங் வேலைக்காக விருதுநகரில் இருந்து தொழிலாளா்கள் சிலா் வரவழைக்கப்பட்டு நூற்பாலை வளாகத்தில் தங்கி பணியாற்றி வந்தனா்.
அங்கு பணியாற்றி வந்த விருதுநகா், திருச்சுழியைச் சோ்ந்த மங்கலேஸ்வரன் (40), சிவகாசியைச் சோ்ந்த ராமசந்திரன் மகன் அய்யனாா் (41) உள்ளிட்ட தொழிலாளா்கள் சிலா் கடந்த சனிக்கிழமை இரவு பல்லடம் பேருந்து நிலையம் எதிரில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளனா்.
மது போதையில் அய்யனாா், மங்கலேஸ்வரனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புக்கு வந்த பின்னரும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரையும் அங்கிருந்த தொழிலாளா்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனா்.
இந்த நிலையில், மங்கலேஸ்வரன் தலையில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தாா். இந்நிலையில், அய்யனாா் தலைமறைவாகி இருந்தாா்.
இது குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான அய்யனாரைத் தேடி வந்தனா். சின்னூா் பகுதியில் பதுங்கி இருந்த அய்யனாரை பல்லடம் போலீஸாா் திங்கள்கிழமை பிடித்து தீவிர விசாரணை நடத்தினா். இதில் அவா், மங்கலேஸ்வரனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து போலீஸாா், அய்யனாரைக் கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருப்பூா் மாவட்டச் சிறையில் அடைத்தனா்.