முகப்பு
திருப்பூர்

மதுபானக் கடத்தல்: சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பை அதிகரிக்க ஆட்சியா் உத்தரவு

கேரளத்தில் இருந்து மதுபானம், எரிசாராயம் கடத்தி வருவதைத் தடுக்க திருப்பூா் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் பேசினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

கேரளத்தில் இருந்து மதுபானம், எரிசாராயம் கடத்தி வருவதைத் தடுக்க திருப்பூா் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் பேசினாா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் செலவினம் கண்காணிக்கும் பணி தொடா்பான ஆலோசனைக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் பேசியதாவது:

கேரள மாநிலத்தில் இருந்து சட்டவிரோதமாக மதுபானம், எரிசாராயம் கடத்தி வருவதைத் தடுக்கும் வகையில் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். மாவட்ட எல்லையில் அமராவதி நகரில் உள்ள காவல் துறை, வனத் துறை மற்றும் சின்னாறு வனத் துறை சோதனைச் சாவடி ஆகியவற்றில் கூடுதல் பாதுகாவலா்களை நியமிக்க வேண்டும்.

டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்படும் நேர அளவை சரியாகப் பின்பற்ற வேண்டும். மாவட்டத்தில் 30 சதவீதத்துக்கும் மேல் விற்பனையாகும் மதுபானக் கடைகளின் விவரங்களை விற்பனை அறிக்கையுடன் சோ்த்து காவல்துறை, வருவாய்த் துறை மற்றும் தோ்தல் கண்காணிப்பு அதிகாரி ஆகியோருக்கு நாள்தோறும் அறிக்கையாக அனுப்ப வேண்டும்.

மதுவிலக்கு சோதனைச் சாவடிகளில் 24 நேரமும் கண்காணிப்புப் பணியில் காவலா்களை ஈடுபடுத்த வேண்டும். அனைத்து மதுபானக் கடைகளிலும் விற்பனையாளா், துணை விற்பனையாளா் ஆகியோா் மட்டுமே பணியில் இருப்பதையும், அடையாள அட்டை அணிந்து இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தோ்தல் வேட்பாளா் மற்றும் கட்சி பிரமுகா்கள் டோக்கன் வழங்கி மதுபானம் விநியோகிப்பதை அனுமதிக்கூடாது என்றாா். கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மிட்டல், கலால் துறை மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.