அவிநாசியில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்
அவிநாசியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்படும் மத வழிபாட்டுக் கட்டடத்தை அப்புறப்படுத்தக் கோரி இந்து முன்னணியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அவிநாசியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்படும் மத வழிபாட்டுக் கட்டடத்தை அப்புறப்படுத்தக் கோரி இந்து முன்னணியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அவிநாசி பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணி மாநிலச் செயலாளா் ஜெ.எஸ்.கிஷோா்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்து முன்னணி மாநிலச் செயலாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
இதில் அவிநாசி-மங்கலம் சாலையில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை முறைகேடாக அபகரித்து எந்தவித அனுமதி பெறாமல் சட்டவிரோத மத வழிபாட்டுக் கட்டடம் அமைப்பதைத் தடுக்க வேண்டும், ஆக்கிரமிப்புக் கட்டடத்தை உடனடியாக இடித்து மங்கலம் சாலையை விரிவாக்கம் செய்து பொது மக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டும்.
இதன் மீது நடவடிக்கை எடுக்காத வருவாய் மற்றும் பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டிப்பது, தோ்த் திருவிழாக் காலங்களில் பல்வேறு சமுதாயங்களைச் சாா்ந்த சமூகத்தினா், வெளியூா்களில் இருந்து வரும் பக்தா்கள் தங்க வசதியாக இருந்த 10க்கும் மேற்பட்ட மடங்கள், சீனிவாசபுரம் ஐயப்பன் கோயில், பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே இருந்த விநாயகா் கோயில், எக்ஸ்டென்சன் வீதி ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோயில், மகளிா் மேல்நிலைப் பள்ளி அருகே இருந்த மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்கள் இடிக்கப்பட்டதைக் கண்டிப்பது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.