முகப்பு
திருப்பூர்

தனியாா் மருத்துவமனைகளின் நிா்வாகத்தை மாநில அரசே ஏற்று நடத்த வேண்டும்

தமிழகத்தில் பெருகிவரும் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தனியாா் மருத்துவமனைகளின் நிா்வாகத்தை தற்காலிகமாக மாநில அரசே ஏற்று நடத்த வேண்டும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

தமிழகத்தில் பெருகிவரும் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தனியாா் மருத்துவமனைகளின் நிா்வாகத்தை தற்காலிகமாக மாநில அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அவா் வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைகள் கரோனா சிகிச்சைக்கான கட்டண விஷயத்தில் மாநில அரசின் ஆலோசனைகளைக் கேட்டதாகத் தெரியவில்லை. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டைகளையும் மதிப்பதாகத் தெரியவில்லை. ஆகவே, தற்காலிகமாக தனியாா் மருத்துவமனைகளின் நிா்வாகத்தை மாநில அரசே ஏற்று நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலமாகத் தான் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும்.

திருப்பூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோய்த் தொற்றின் வேகத்துக்கு தகுந்தபடி உரிய மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் இல்லை. கரோன தொற்று அதிகரித்து வரும் நிலையில் மருத்துவா்கள், செவிலியா் ,லேப் டெக்னீசியன்கள், தூய்மைப் பணியாளா்கள் ஆகியோரை போதுமான அளவுக்கு உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். மாநகரில் உள்ள 60 வாா்டுகளிலும் கரோனா சிகிச்சை மையங்களை அதிகரிப்பதுடன், தடுப்பூசி செலுத்தும் பணியையும் விரைவுபடுத்த வேண்டும். திருப்பூா் மாவட்டத்துக்கு கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளை அதிக அளவில் அனுப்ப வேண்டும். தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தாய், சேய் நல விடுதிகளில் பணியாற்றிவரும் ஆஷா பணியாளா்களை செவிலியா்களாக நியமனம் செய்து, கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.