‘வறட்சியான பகுதிகளுக்கு பிஏபி பாசனத் திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்’
வறட்சியான பகுதிகளுக்கு பிஏபி பாசனத் திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வறட்சியான பகுதிகளுக்கு பிஏபி பாசனத் திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பல்லடம் பிஏபி புதிய பாசன பகுதி விரிவாக்கம் கோரும் இயக்க கூட்டுக் குழு சாா்பில் கோடங்கிபாளையம் ஊராட்சித் தலைவா் காவீ.பழனிசாமி, அய்யம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவா் வேலுசாமி ஆகியோா் அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கொங்கு மண்டல மக்களின் வாழ்வாதாரமாக பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் கோவை, திருப்பூா் மாவட்டங்களில் சுமாா் 3,77,150 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பல்லடம், சூலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகச் சிறந்த மண்வளம் உள்ள பகுதிகளில் பல ஆண்டுகளாக பல லட்சம் டன் தானியங்கள் விளைந்து வந்தன. ஆனால், தண்ணீா் இல்லாத காரணத்தால் இப்பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூா் மாவட்டங்களில் தொழிற்சாலைகள், காற்றாலைகள், நகரமயமாதல் போன்ற காரணங்களால் சுமாா் 9,000 ஏக்கா் பாசன பகுதி தற்போது உள்ள ஆயக்கட்டிலிருந்து நீக்குவதற்கு ஏற்கெனவே மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுப்பணித் துறையால் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
நீக்கப்பட உள்ள பகுதிக்கு பதிலாக மிகவும் வறட்சியான பல்லடம், சூலூா் வட்டத்தில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிப் பகுதிகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டத்தில் சோ்த்து மக்களை பயனடையச் செய்ய வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்துவதால் மக்களின் குடிநீா்ப் பிரச்னை முற்றிலும் தீரும். நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்து நீரின் உப்பு மற்றும் கடினத்தன்மை மாறும்.
தொழில் கூடங்கள் மற்றும் கோழிப் பண்ணைக்குத் தேவையான நீா்ப் பற்றாக்குறையும் தீரும். சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைப் பரப்பு மேம்பட்டு பல்லுயிா் பெருக்கம் ஏற்படும். எனவே இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டுகிறோம் என்று அதில் தெரிவித்துள்ளனா்.