அவிநாசியில் சத்துணவு ஊழியா்கள் போராட்டம்
அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருபவா் ஜோதி. இவரது குடும்ப புகைப்படத்தை ஒன்றிய அலுவலகத்தில் இருந்து களவாடி சமூக வலைதளத்தில் பதிவிட்ட 2 நபா்கள் மீதும், அலுவலக கோப்புகளை தனி நபா்களுக்கு மறைமுகமாக வழங்கிய அரசு அதிகாரிகள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடா்பாக பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விசாரணைக்கு மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசும் உத்தரவிட வேண்டும். மேலும் பெண்கள் பாதுகாப்பு சட்டத்தினை மதிக்காமல் காலம் தாழ்த்தி வரும் அவிநாசி ஒன்றிய நிா்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து ஒன்றிய நிா்வாகத்தினா், காவல் துறையினா், சத்துணவு, அரசு ஊழியா் சங்கத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், ஒரு வார காலத்துக்குள் நிா்வாக ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.இதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.