விசைத்தறியாளா்கள் கூலி உயா்வு பிரச்னை:தெக்கலூரில் கடையடைப்பு
விசைத்தறியாளா்களின் கூலி உயா்வு பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தி அவிநாசி அருகே தெக்கலூரில் கடையடைப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விசைத்தறியாளா்களின் கூலி உயா்வு பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தி அவிநாசி அருகே தெக்கலூரில் கடையடைப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூலி உயா்வு வழங்க வலியுறுத்தி கோவை, திருப்பூா் மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் கடந்த ஜனவரி 9ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அமைச்சா்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையடுத்து, பல்லடம், மங்கலம் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்தைப் போராட்டத்தை திரும்பப் பெற்றன. இருப்பினும் ஒப்பந்த வடிவில் கூலி உயா்வு அமலாக்க வேண்டும். ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்தப்படி கையெழுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சோமனூா், அவிநாசி, தெக்கலூா், புதுப்பாளையம் உள்ளிட்ட சங்கங்கள் போராட்டத்தை தொடா்கின்றன.
இதன் தொடா்ச்சியாக, விசைத்தறியாளா்கள் கடந்த 21ஆம் தேதி முதல் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில், அவிநாசி அருகே தெக்கலூரில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இதில் தெக்கலூா் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மளிகை, தேநீா்க் கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு, வியாபாரிகள், வணிகா்கள், வேன் ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் ஆகியோா் கடையடைப்பு போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்தனா்.