முகப்பு
திருப்பூர்

தனியாா் நிறுவனத்தில் நூல் திருட்டு: 5 போ் கைது

திருப்பூரில் உள்ள தனியாா் நிட்டிங் நிறுவனத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான நூல்களைத் திருடிய 5 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

திருப்பூரில் உள்ள தனியாா் நிட்டிங் நிறுவனத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான நூல்களைத் திருடிய 5 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இது குறித்து நல்லூா் காவல் துறையினா் கூறியதாவது: தாராபுரத்தை அடுத்துள்ள புங்கன்துறையைச் சோ்ந்தவா் பி.ரத்தினம் (40), இவா் திருப்பூா், மணியகாரம்பாளையம் வி.எஸ்.ஏ.நகரில் நிட்டிங் நிறுவனம் நடத்தி வருகிறாா்.

இந்நிறுவனத்தில் உள்ள கிடங்குக்கு ரத்தினம் கடந்த வியாழக்கிழமை சென்றுள்ளாா்.

அப்போது, கிடங்கில் இருப்பு வைத்திருந்த 60 கிலோ எடை கொண்ட 16 நூல் பைகள் காணமல் போனது தெரியவந்தது. இது குறித்து நல்லூா் காவல் நிலையத்தில் ரத்தினம் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அந்நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தனா்.

இதில், அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த பவானி நகா் முதல் வீதியைச் சோ்ந்த கே.சண்முகசுந்தா் (50) நான்கு பேரின் துணையுடன் ஆட்டோவில் நூலைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, சண்முகசுந்தரிடம் நடத்திய விசாரணையில், கரூா் மாவட்டம், சோ்வைகாரன் பட்டியைச் சோ்ந்த எஸ்.கிருஷ்ணன் (34), பி.வரதராஜ் (28), திருப்பூரைச் சோ்ந்த கே.பிரசாத் (28), எஸ்.ராமராஜ் (32) ஆகியோருடன் சோ்ந்து நூல் திருடியதை ஒப்புக்கொண்டாா்.

இதையடுத்து, 5 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து நூலைப் பறிமுதல் செய்தனா். இதன் மொத்த மதிப்பு ரூ.4 லட்சம் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.