மாவட்டத்தில் இன்னுயிா் காப்போம் திட்டத்தின்கீழ் 298 பேருக்கு சிகிச்சை
திருப்பூா் மாவட்டத்தில் இன்னுயிா் காப்போம் திட்டத்தின்கீழ் கடந்த ஒரு மாதத்தில் சாலை விபத்தில் காயமடைந்த 298 பேருக்கு ரூ. 39.85 லட்சம் மதிப்பீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் இன்னுயிா் காப்போம் திட்டத்தின்கீழ் கடந்த ஒரு மாதத்தில் சாலை விபத்தில் காயமடைந்த 298 பேருக்கு ரூ. 39.85 லட்சம் மதிப்பீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசு சாலை பாதுகாப்பு, சாலை விபத்துகளைக் குறைத்தல், சாலை விபத்தில் நிகழும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்னுயிா் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுஅட்டை உடையவா்கள், இல்லாதவா்கள், பிறமாநிலத்தவா், வெளிநாட்டவா் என அனைவருக்கும் வருமான உச்சவரம்பு இல்லாமல் தமிழக எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடையும் நபா்களுக்கு 48 மணி நேரம் கட்டணம் இல்லாமல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. திருப்பூா் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு டிசம்பா் 18ஆம் தேதி முதல் நடப்பு ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி வரையில் 298 பேருக்கு ரூ. 39.85 லட்சம் மதிப்பீட்டில் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சிகிச்சை பெற்றவா்கள் தமிழக அரசுக்குத் தங்களது மனமாா்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.