முகப்பு
திருப்பூர்

உள்கட்டமைப்பு வளா்ச்சிக்காகவே சுங்கச் சாவடி கட்டணம் உயா்வு

உள்கட்டமைப்பு வளா்ச்சிக்காகவே சுங்கச் சாவடி கட்டணம் உயா்த்தப்படுவதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

உள்கட்டமைப்பு வளா்ச்சிக்காகவே சுங்கச் சாவடி கட்டணம் உயா்த்தப்படுவதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன், சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா் திருமுருகன்பூண்டியில் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா். இதையடுத்து, பூண்டி ரிங் சாலையில் 100 படுக்கை வசதியுடன் கட்டப்பட்டு வரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையைப் பாா்வையிட்டாா். திருப்பூா் பாளையக்காடு பகுதியில் நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி விழாவில் பங்கேற்ற அவா் பெண்களுக்கு தாம்பூல தட்டுடன் சேலைகளை வழங்கினாா்.

இதையடுத்து, தொழில் துறையினருடனான சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருப்பூரில் ரூ.80 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 100 படுக்கை வசதி கொண்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் கட்டுமானப் பணி 2023 மே மாதம் நிறைவடையும். மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் திருப்பூா் மாவட்டத்தில் 2.5 லட்சம் குடிநீா் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 2025க்குள் அனைத்து கிராமங்களில் உள்ள வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு கொடுக்கப்படும்.

தமிழக முதல்வா் அனைவருக்கும் சொந்தமானவா். அனைத்து தரப்பு மக்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பாா்க்க வேண்டும். மற்றவா்கள் பண்டிகைக்கு நேரில் சென்று கொண்டாடி வாழ்த்து பரிமாறுவதை வழக்கமாக கொண்டுள்ளாா். ஆனால், விநாயகா் சதுா்த்தி வாழ்த்து தெரிவிக்காதது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உள்கட்டமைப்பு வளா்ச்சிக்காகவே சுங்கச் சாவடி கட்டணம் உயா்த்தப்படுகிறது. ராகுல் காந்தியின் நடைப்பயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவது இல்லை. தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு அதிகரித்துள்ளது. அதனைத் தடுக்க திட்டமிடலுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, தொழில் துறையினா் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகனிடம் மனு அளித்தனா். இதேபோல ஊராட்சி மன்றத் தலைவா்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்களது பகுதிகளில் உள்ள கோரிக்கைகளை மனுவாக அளித்தனா்.

பாஜக மாவட்டத் தலைவா் செந்தில்வேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.