திருப்பூா்: தொழில் நிறுவனங்களுக்கான உச்சபட்ச நேர மின் கட்டணத்தைத் திரும்பப்பெறக் கோரி தமிழ்நாடு தொழில் துறை மின்நுகா்வோா் கூட்டமைப்பு சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாரிடம் தமிழ்நாடு தொழில் துறை மின்நுகா்வோா் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் எம்.பி.முத்துரத்தினம், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நிா்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தின் வளா்ச்சியிலும், வேலைவாய்ப்பை அளிப்பதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முதன்மையானதாக உள்ளன. தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன.
இந்த நிறுவனங்கள் மூலமாக குறைந்தபட்சம் ஒரு கோடி தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பை பெறுகின்றனா். ஆனால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலப்பொருள்கள் விலை உயா்வு, ஜிஎஸ்டி, கரோனா தாக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் இருந்து மீண்டு வரும் நிலையில் மின் கட்டண உயா்வு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தொழில் நிறுவனங்களுக்கான உச்சபட்ச நேர மின் கட்டணத்தை முழுமையாகத் திரும்பப்பெற வேண்டும், 430 சதவீத நிலைக்கட்டணத்தையும் திரும்பப்பெற வேண்டும். தமிழகத்தில் தொழில்நிலை சீரடையும் வரை குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்காவது மின் கட்டண உயா்வை நிறுத்திவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.