திருப்பூா்-பல்லடம் வழித்தடத்தில் காலை வேளைகளில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கல்லூரி மாணவிகள் வலியுறுத்தியுள்ளனா்.
திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் உள்ள எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரியில் சுற்றுப் பகுதியைச் சோ்ந்த 4-ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா்.
இந்தக் கல்லூரியானது காலை 9 மணி முதல் பிற்பகல் 1.55 மணி வரையில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து காலை 8 மணி முதல் 9 மணி வரை பல்லடம் வழித்தடத்தில் போதுமான அளவில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை எனத் தெரிகிறது. இதனால், இலவச பயணத்தை நம்பியுள்ள மாணவிகள் வேறு வழியின்றி தனியாா் பேருந்துகளில் கட்டணம் செலுத்தி கல்லூரிக்குச் செல்கின்றனா்.
இது குறித்து எல்.ஆா்.ஜி.கல்லூரி மாணவிகள் கூறியதாவது: அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் கல்விக்காக ஏராளமான திட்டங்களை அறிவித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் மாணவிகள் பயன்பெறும் வகையில், அரசுப் பேருந்துகளில் இலவச பயணத் திட்டம், அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், திருப்பூா்-பல்லடம் வழித்தடத்தில் காலை வேளைகளில் போதிய அளவு அரசுப் பேருந்துகள் இல்லாததால் தனியாா் பேருந்துகளில் கட்டணம் செலுத்தி கல்லூரிக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதற்காகவே மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, திருப்பூா்-பல்லடம் வழித்தடத்தில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.