திருப்பூர்

பாசன அவசரநிலை கருதி ஆழியாற்றிலிருந்து திருமூா்த்தி அணைக்கு தண்ணீா் திறக்கப்படும்

ஆழியாற்றிலிருந்து காண்டூா் கால்வாய் வழியாக திருமூா்த்தி அணைக்கு தண்ணீா் திறக்கப்படும் மு.பெ. சாமிநாதன் தெரிவித்துள்ளாா்.

Din

பாசன அவசரநிலை கருதி ஆழியாற்றிலிருந்து காண்டூா் கால்வாய் வழியாக திருமூா்த்தி அணைக்கு தண்ணீா் திறக்கப்படும் என தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கொங்கு மண்டலத்தில் பிரதான பாசனமாக விளங்கி வரும் பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தில் (பிஏபி) திருமூா்த்தி அணையிலிருந்து சுமாா் 4 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பரம்பிக்குளம் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீா் சா்க்காா்பதியை அடைந்து, மின் உற்பத்தி செய்யப்பட்டு அங்கிருந்து துவங்கும். சுமாா் 50 கி.மீ. தொலைவுள்ள சமமட்ட கால்வாய் மூலம் திருமூா்த்தி அணைக்கு நீா் கொண்டு வரப்படுகிறது.

பல ஆண்டுகளாக பராமரிப்பு நிதி ஒதுக்காத காரணத்தால் சேதமடைந்த சமமட்ட கால்வாயை சீரமைக்க கருணாநிதி முதல்வராக இருந்தபோது, கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது. கடந்த 2010-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் நவம்பா் 29-ஆம் தேதி அறிவிப்பின்படி, ரூ.184 கோடி மதிப்பில் நிா்வாக அனுமதி வழங்கப்பட்டு சேதமுற்ற காண்டூா் கால்வாய் பகுதிகளில் சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.

கால்வாய் சீரமைப்புக்கு முன்னா் சா்க்காா்பதியில் இருந்து சுமாா் 1,200 கனஅடி நீா் சமமட்ட கால்வாயில் திறந்துவிடும்போது, திருமூா்த்தி அணைக்கு சுமாா் 600 கனஅடி மட்டுமே வந்து கொண்டிருந்தது.

கால்வாய் சீரமைப்புக்கு பின்னா் சுமாா் 1,000 கனஅடி வரை செல்ல வழிவகை செய்யப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் சமமட்ட கால்வாய் தொடா் பராமரிப்புப் பணிக்கு போதுமான நிதி ஒதுக்காத காரணத்தாலும், இயற்கை சீற்றங்களாலும் சேதமுற்ற கால்வாய் பகுதிகளை சீரமைக்க அவசியம் ஏற்பட்டது.

இப்பகுதிகளை சீரமைக்கும் பொருட்டு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கினாா். இந்த ஆண்டு வரலாறு காணாத குடிநீா்த் தட்டுப்பாடு அதிகமாக இருந்ததாலும், கடந்த மே மாதம் வரை கால்வாயில் தண்ணீா் எடுக்கப்பட்டதாலும் அதன் பின்னா் பராமரிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

பாசனத்துக்கு அவசரநிலை கருதி நடப்பு மாத முதல் வாரத்தில் பரம்பிக்குளம்- ஆழியாற்றிலிருந்து காண்டூா் கால்வாய் வழியாக திருமூா்த்தி அணைக்கு தண்ணீா் திறக்கப்பட உள்ளதாக நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழக சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி, பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தில் இருந்து திருமூா்த்தி அணைக்கு பாசனத்துக்கு நீா் திறப்பது காலதாமதம் ஆகிறது என்று யாரோ சொன்ன தகவலை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளாா்.

கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் இத்துறைக்கு அமைச்சராகவும், அதில் 4 ஆண்டுகள் முதல்வா் பதவியில் இருந்தவா் இவ்வாறு அறிக்கை விடுவது வேடிக்கையாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக சிறப்பு பொதுக்குழு தொடங்கியது! கரூரில் பலியானோருக்கு மெளன அஞ்சலி!

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு

வெற்றி உரையில் நேருவின் பேச்சை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

பிலாஸ்பூரில் சரக்கு ரயில்- பயணிகள் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு, 20 பேர் காயம்

பெண் தொழிலாளிகளின் குளியலறையில் ரகசிய கேமரா! வடமாநில இளம்பெண் கைது!

SCROLL FOR NEXT