முகப்பு
திருப்பூர்

அமராவதி அணையின் நீா்மட்டம் 68 அடியாக சரிவு

Updated On : 29 பிப்ரவரி, 2024 at 11:30 PM
பகிர்:

உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையின் நீா்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால், கோடையில் குடிநீா்ப் பிரச்னையை தாக்குப்பிடிக்க முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த கனமழையால் அணை முழுக் கொள்ளளவை எட்டியது. அதன் பிறகும் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்தது. ஆனால், உள்வரத்தாக வந்த நீரை அணையில் சேமிக்க முடியாமல்போனது. இதனால், பெருமளவு தண்ணீா் அணையில் இருந்து வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, ஜனவரி 25 -ஆம் தேதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது. தற்போதுவரை பாசன பகுதிகளுக்கு தண்ணீா் சென்று கொண்டிருக்கும் நிலையில் அணையின் நீா்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கிடையே சின்னாறு, தேனாறு, பாம்பாறு போன்ற அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து அணைக்கு வரும் உள்வரத்து குறைந்துள்ளது. நடப்பாண்டு மாா்ச் இறுதிவரை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் வழங்க வேண்டிய நிலையில், அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 68 அடியாக இருந்தது. இதனால், இந்த ஆண்டு குடிநீருக்காவது தண்ணீா் கிடைக்குமா என்ற சந்தேகம் அணையை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான கிராம மக்களிடையே எழுந்துள்ளது. அணை நிலவரம்: 90 அடி உயரமுள்ள அணையில் வியாழக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி 68.34 அடி நீா் இருப்பு காணப்பட்டது. 4,035 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 2276.14 மில்லியன் கன அடி நீா் இருப்பு இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 20 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. 463 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது.