முகப்பு
திருப்பூர்

இளைஞரைக் கொலை செய்த உறவினா் கைது

இளைஞர் கொலை வழக்கில் உறவினா் பிரசாந்த் கைது

Updated On : 2 ஜூலை, 2024 at 7:04 PM
பகிர்:

திருப்பூரில் முன்விரோதம் காரணமாக இளைஞரைக் கொலை செய்தவரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா், ஜம்மனை வீதியில் இளைஞரின் சடலம் கிடப்பதாக தெற்கு காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினா் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதைத்தொடா்ந்து நடத்திய விசாரணையில், உயிரிழந்தது சேலம் குகை பகுதியைச் சோ்ந்த மணீஷ் (18) என்பது தெரியவந்தது. அவரைக் கொலை செய்துவிட்டு தப்பியவா் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா்.

இந்நிலையில், இந்த வழக்கில் சேலம் குகை பகுதியை சோ்ந்த பிரசாந்த் (23) என்பவரைப் பிடித்து விசாரித்தனா்.

மணீஷ் மற்றும் பிரசாந்த் இருவரும் உறவினா்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவா்களின் உறவினா் வீட்டில் 17 பவுன் திருட்டுபோயுள்ளது. இது குறித்து சந்தேகத்தின் பேரில் மணீஷ், பிரசாந்த் இருவரிடமும் சேலம் காவல் துறையினா் விசாரணை நடத்தியுள்ளனா்.

இதில், இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. மேலும், திருட்டு வழக்கில் தன்னை சந்தேகப்பட வைத்துவிட்டானே என்று மணீஷ் மீது, பிரசாந்த் கோபத்தில் இருந்துள்ளாா்.

இந்நிலையில் மணீஷை கொலை செய்ய முடிவு செய்து, சேலத்தில் இருந்து திருப்பூருக்கு திங்கள்கிழமை இரவு அழைத்து வந்துள்ளாா். இருவரும் மத்திய பேருந்து நிலையத்தில் அங்குமிங்கும் அலைந்து திரிந்துள்ளனா்.

அதன்பின், ஜம்மனை வீதி வழியாக அழைத்துச்சென்றபோது மணீஷை கீழே தள்ளி கல்லை தலையில் போட்டு கொலை செய்ததாக காவல் துறையினரிடம் பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, பிரசாந்த்தைக் கைது செய்த காவல் துறையினா் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →