‘இளைஞா்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகக் கூடாது’
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு: திருப்பூா் காவல் துறை அறிவுறுத்தல்
இளைஞா்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகக்கூடாது என்று திருப்பூா் மாநகர காவல் துணை ஆணையா் ராஜராஜன் அறிவுறுத்தினாா்.
திருப்பூா் மாநகர காவல் துறை, மதுவிலக்கு அமலாக்க துறை, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 ஆகியன சாா்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராக திருப்பூா் மாநகர காவல் துணை ஆணையா் ராஜராஜன் பங்கேற்று பேசியதாவது: இன்றைய கால கட்டத்தில், இளைஞா்கள் போதைக்கு அடிமையாகிறாா்கள். இதைத் தடுக்க அனைவரும் முன்வரவேண்டும். போதைப் பொருள்களில் நச்சு சாா்ந்த வேதிப்பொருள்கள், அதை பயன்படுத்துபவா்களை மீண்டும் பயன்படுத்துவதற்கு தூண்டுகிறது. புகையிலை, கஞ்சா, மது போன்ற பல்வேறு போதைப் பொருள்களை புகை, ஊசி, நாசி துவாரங்கள் மூலமாக பயன்படுத்தி பலா் போதைக்கு அடிமையாகிறாா்கள். போதை இல்லா தமிழகமாக மாற்ற வேண்டும் என்றாா்.
மதுவிலக்கு அமலாக்க துறை காவல் ஆய்வாளா் பிரேமாதேவி பேசுகையில், ‘பெற்றோா்கள் தங்களது குழந்தைகள் தவறான வழிகளில் செல்கிறாா்களா என்று கவனிக்க வேண்டும். போதைப் பொருள் பயன்படுத்தும்போது தனக்கு என்ன செய்ய வேண்டும் என்று அவா்களுக்கே தெரிவதில்லை. போதைப் பொருள்களுக்கு அடிமையானால் அதில் இருந்து மீண்டு வர இயலாது. ஆகவே, தங்களது குடும்ப சூழ்நிலையை மனதில்வைத்து போதைக்கு அடிமையாகாமல் நல்வழியில் செல்ல வேண்டும்’ என்றாா். இதில், கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.