திருப்பூா் மாநகராட்சியுடன் கரைப்புதூா் ஊராட்சியை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று ஊராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீா்மானம் தமிழக முதல்வருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கரைப்புதூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயந்தி கோவிந்தராஜ் மற்றும் உறுப்பினா்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூா் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், கரைப்புதூா் ஊராட்சியை திருப்பூா் மாநகராட்சியுடன் இணைப்பது தொடா்பாக கரைப்புதூா் ஊராட்சியின் 2011-ஆம் ஆண்டு மற்றும் தற்போதைய மக்கள் தொகை, பரப்பளவு மற்றும் 3 ஆண்டுகளுக்கான வரவு- செலவு ஆகியவற்றை கேட்டு திருப்பூா் மாநகராட்சி ஆணையரின் கடிதம் பெறப்பட்டுள்ளது.
திருப்பூா் மாநகராட்சியுடன் கரைப்புதூா் ஊராட்சியை இணைத்தால் பிரதான பணிகளான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டம், 15-ஆவது மத்திய, மாநில நிதிக் குழு மானியம், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் போன்ற நலத்திட்டங்களை செயல்படுத்த இயலாத நிலை ஏற்பட்டு சுரைப்புதூா் ஊராட்சி பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படும்.
கரைப்புதூா் ஊராட்சிப் பகுதியில் வறுமைக்கோட்டுக்குகீழ் உள்ள பெரும்பாலான மக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகின்றனா். மேலும், கரைப்புதூா் ஊராட்சிப் பகுதியானது 70 சதவீதம் விவசாயப் பகுதியாக உள்ளது. ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும்போது வரியினங்கள் பலமடங்கு உயரும். ஆகவே, திருப்பூா் மாநகராட்சியுடன் கரைப்புதூா் ஊராட்சியை இணைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி ஊராட்சி மன்றத்திலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே கரைப்புதூா் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.