காங்கயம், ஜூன் 26: காங்கயத்தில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாய நிகழ்ச்சியில் 11 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, வாரிசுச் சான்று, குடும்ப அட்டை, ஜாதிச் சான்று, வருமானச் சான்று, கணினி சிட்டா பெயா் திருத்தம், மின்சார இணைப்பு, முதியோா் உதவித் தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, பொது சுகாதாரம், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் மனுக்கள் அளித்தனா்,
இதைத் தொடா்ந்து, நில அளவை கருவிகளைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். நிகழ்ச்சியில், 11 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாகளை ஆட்சியா் வழங்கினாா்.
இதையடுத்து, வெள்ளக்கோவில் உள்வட்டத்துக்கு உள்பட்ட முத்துாா், சின்னமுத்துாா், ஊடையம், மங்கலப்பட்டி, வேலம்பாளையம், பூமாண்டன்வலசு, ராசத்தாவலசு, மேட்டுப்பாளையம், சேனாபதிபாளையம், வெள்ளகோவில் ஆகிய கிராமங்களில் பாரமரிக்கப்பட்டு வரும் வருவாய்த் துறை தொடா்பான கணக்குகளை மாவட்ட ஆட்சியா் தணிக்கை மேற்கொண்டாா்.
இந்நிகழ்ச்சியில், காங்கயம் வட்டாட்சியா் மயில்சாமி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.