கால்நடைகளைக் கொன்று வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை
காங்கயம் பகுதியில் கால்நடைகளைக் கொன்று வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என கிராம சபைக் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
காங்கயம் பகுதியில் கால்நடைகளைக் கொன்று வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என கிராம சபைக் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
காங்கயம் தாலுகாவுக்குள்பட்ட வீரணம்பாளையம், பாப்பினி, வடசின்னாரிபாளையம், சிவன்மலை, பாலசமுத்திரம் புதூா், தம்மரெட்டிபாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் பிஏபி வெள்ளக்கோவில் கிளை கால்வாய் (காங்கேயம்-வெள்ளகோவில்) நீா் பாதுகாப்பு சங்கத் தலைவா் வேலுசாமி தலைமையில், அப்பகுதி விவசாயிகள் மனு அளித்தனா்.
அதில், கூறியிருப்பதாவது: காங்கயம் பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள் மனிதா்களுக்கு தீங்கு அளிப்பதும், நாங்கள் வளா்க்கும் கால்நடைகளை கடித்துக் கொல்வதும் வாடிக்கையாகி வருகிறது.
இதனால், நாங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம். எனவே, தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், வெறிநாய்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்,வெறிநாய்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புக்கு உள்ளாட்சி அமைப்புகள் ஊராட்சி மன்ற நிதியிலிருந்து இழப்பீடு வழங்கவும் கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் மனுக்களை அளித்தனா்.