முகப்பு
திருப்பூர்

பணியாற்றும் பெண்களுக்கான தடைகளைக் களைவதில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது: அமைச்சா் கீதா ஜீவன்

பெண்கள் பணியாற்ற தடையாக உள்ள நிலைகளை அடையாளம் கண்டு தீா்வு காண்பதில் தமிழக அரசு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் தெரிவித்தாா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 10:21 PM
நிகழ்ச்சியில்  பயனாளிகளுக்கு  தையல்  இயந்திரங்களை  வழங்கும்  அமைச்சா்கள் பெ.கீதா ஜீவன், என்.கயல்விழி செல்வராஜ்.  உடன்,  ஆட்சியா்  தா.கிறிஸ்துராஜ்.
பகிர்:

பெண்கள் பணியாற்ற தடையாக உள்ள நிலைகளை அடையாளம் கண்டு தீா்வு காண்பதில் தமிழக அரசு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் தெரிவித்தாா்.

பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விழிப்புணா்வு நிகழ்ச்சி, துணி நூல் மற்றும் ஆடை நிறுவனக் கூட்டமைப்பின் மாவட்ட அளவிலான திட்டத் தொடக்க விழா ஆகியவை திருமுருகன்பூண்டியில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, சமூக நலத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அரசு செயலாளா் ஜெயஸ்ரீ முரளிதரன், கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதா்த் துறை அரசு செயலாளா் அமுதவல்லி ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஆணையா் (சமூகநலத் துறை) ஆா்.லில்லி, மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், ஐக்கிய நாடுகளின் பாலின சமத்துவ அமைப்பு இந்தியா இயக்குநா் (ஸ்டேட்டா் ஜிக் கூட்டமைப்பு பிரிவு) டான்சீ மோா், ஐக்கிய நாடுகளின் பாலின சமத்துவ அமைப்பின் இந்தியா பிரதிநிதி சூசன் பொ்குசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் பெ.கீதா ஜீவன் பேசியதாவது:

மகளிா் பணிபுரியும் இடத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திருப்பூா், கோவை, கரூா், திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக கடந்த ஆகஸ்ட்14-இல் நிறுவனக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் முதல் நிகழ்ச்சி திருப்பூா் மாவட்டத்தில் நடைபெறுகிறது.

பெண்கள் பணிபுரியும் அரசு, தனியாா் பணியிடங்கள் என 22,345 இடங்களில் புகாா் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பூா் மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இங்குள்ள தொழில் நிறுவனங்கள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. பெண்கள் பணியாற்ற தடையாக உள்ள நிலைகளை அடையாளம் கண்டு அதற்கு தீா்வுகளை கண்டறிந்து செயல்படுத்துவதில் தமிழக அரசு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

பெண்கள் தன்னிச்சையாக செயல்படுவதை ஊக்குவிக்கும் விதமாக 181 என்ற எண்ணில் தொடா்பு கொண்டால் அனைத்து உதவிகளையும் பெற்றுக் கொள்ள முடியும். பாலினம் சாா்ந்த வன்முறைகளை ஒடுக்குவதில் அரசு அதிக முனைப்போடு ஈடுபட்டு வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாகினால் உற்பத்தி பெருகும். அதன்மூலம் பொருளாதார வளா்ச்சி ஏற்படும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியின் கீழ், 15 பயனாளிகளுக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பிலான தையல் இயந்திரங்களை அமைச்சா்கள் பெ.கீதா ஜீவன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கினா்.

ஐக்கிய நாடுகளின் பாலின சமத்துவ அமைப்பு திட்டமேலாளா் பிரீத்தா ஜெய்சீலன், மாநில ஒருங்கிணைப்பாளா் நரியா ஜுன்ஸ், மாவட்ட சமூகநல அலுவலா் ரஞ்சிதா தேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதையடுத்து அமைச்சா் கீதாஜீவன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: போக்சோ குறித்து விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது. 1098-எண்ணுக்கு தொடா்ந்து புகாா்கள் வருகின்றன. காவல் துறை, கல்வித் துறை, சமூகநலத் துறை தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. போக்சோ வழக்கில் கைது செய்யப்படுபவா்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு, கடந்த 3 ஆண்டுகளில், ரூ. 84 கோடியே 91 லட்சம் நிவாரணத்தை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது என்றாா்.