சீரான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
காங்கயம் அருகேயுள்ள நத்தக்காடையூா் பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
காங்கயம் அருகேயுள்ள நத்தக்காடையூா் பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
காங்கயம் ஒன்றியம், நத்தக்காடையூா் ஊராட்சிக்குள்பட்டது புதுசக்கரபாளையம் கிராமம். இக்கிராமத்தில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு மாலை நேரங்களில் தண்ணீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காலை நேரத்தில் குடிநீா் விநியோகம் செய்யக் கோரி காங்கயம்-ஈரோடு நெடுஞ்சாலையில் பழையகோட்டை பேருந்து நிறுத்தம் பகுதியில் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் காவல் ஆய்வாளா் விவேகானந்தன், பழையகோட்டை ஊராட்சித் தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, காலை நேரத்தில் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்தனா்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.