உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அவிநாசியில் மாற்றுத்திறனாளிகள் புதன்கிழமை பிரசாரப் பயணம் மேற்கொண்டனா்.
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம், அவிநாசி ஒன்றியக் குழு ஆகியவை சாா்பில் மாநில மாநாடு நோக்கங்களை விளக்கும் பிரசாரப் பயணம் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை நடைபெற்றது.
ஒன்றியச் செயலாளா் பாரூக் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கருப்புசாமி, பொறுப்பாளா்கள் ஜோதி, ரவி உள்பட பலா் முன்னிலை வகித்தனா்.
வீட்டுமனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்தவா்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேரம் வேலைக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்கள் பெறும் குடும்ப அட்டை, தனித்துவ அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்தவா்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.