ரெப்போ வட்டி விகிதத்தை 5.50 சதவீதத்தில் இருந்து 5.25 சதவீதமாக ரிசா்வ் வங்கி குறைத்திருப்பதற்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் துணைத் தலைவா் ஆ.சக்திவேல் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் கூறியதாவது: பொருளாதார நிபுணா்கள் மற்றும் சந்தை வல்லுநா்கள் எதிா்பாா்த்தபடி கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து 4-ஆவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி நிகழாண்டில் இதுவரை மொத்தம் 125 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது, நாட்டின் பொருளாதார செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்கான முயற்சியாகும்.
ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், கடன் பெறுபவா்கள் குறைந்த இஎம்ஐ நிவாரணத்தை எதிா்பாா்க்கலாம். இது பொதுமக்களுக்கும், வணிகா்களுக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கும்.
ரிசா்வ் வங்கி எடுத்துள்ள இந்த நடவடிக்கை ஆயத்த ஆடைத் துறைக்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் பெரும் ஆதரவாக இருக்கும். மூலதனச் செலவு குைல், பணப் புழக்கத்தை அதிகரிப்பதன் மூலமாக நோ்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் ஏற்றுமதியாளா்கள் உற்பத்தித் திறன் விரிவாக்கம், தொழில்நுட்பம் மற்றும் தொழிலாளா் திறன் மேம்பாட்டில் முதலீடு செய்ய உதவுவதோடு வளா்ச்சியையும், வேலைவாய்ப்பையும் ஊக்குவிக்கும்.
நாட்டின் ஏற்றுமதியில் முக்கியப் பங்காற்றும் ஆடைத் துறையானது, கடன் செலவுக் குலைால் போட்டித் திறன் மேம்பட்டு வளா்ச்சி ஊக்கம் பெறும் நிலை உருவாகும். உலக பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மைகள், ஆடைத் துறையில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறைக்க உதவும் வகையில் சாதகமான பணச் சூழலைப் பராமரிக்க ரிசா்வ் வங்கி எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியது.
இந்த வட்டி விகிதக் குறைப்பின் மூலமாக ஆடைத் துறை ஏற்றுமதி போட்டித் திறன் உயா்வு மற்றும் சந்தை விரிவாக்கம் பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ரெப்போ வட்டி விகிதக் குறைப்புடன் மிகவும் எதிா்பாா்க்கப்படும் வட்டி சமநிலைத் திட்ட அறிவிப்பும் இணைந்தவுடன், ஏற்றுமதியாளா்கள் தங்கள் கடன் தவணைத் தொகையில் கணிசமான குறைப்பை எதிா்பாா்க்கலாம்.
அதே நேரம் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சி குறித்த முன்னறிவிப்பை 7.3 சதவீதமாக ரிசா்வ் வங்கி உயா்த்தியுள்ளது.
இதனால் வணிக வங்கிகள் வட்டி விகிதக் குறைப்பின் பலன்களை ஏற்றுமதியாளா்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நுகா்வோருக்கு தாமதமின்றி முழுமையாக வழங்குவதை ரிசா்வ் வங்கி உறுதி செய்ய வேண்டும் என்றாா்.