திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 55,108 பேருக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கூறினாா்.
மகளிா் உரிமைத் தொகை திட்ட 2-ஆம் கட்ட விரிவாக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, திருப்பூரில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பங்கேற்று 2-ஆம் கட்ட திட்டத்தின்கீழ் மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினா்.
இதைத் தொடா்ந்து, அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: தமிழகத்தில் ஏற்கெனவே 1 கோடியே 13 லட்சம் குடும்பங்களைச் சோ்ந்த பெண்களுக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில், 2-ஆம் கட்டமாக 17 லட்சம் பெண்களுக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தால் பெண்கள் மத்தியில் பொருளாதார வளா்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன் மூலமாக பல்வேறு துறையில்களில் பொருளாதார சுழற்சியும் ஏற்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் முதற்கட்டமாக 3 லட்சத்து 99,150 பெண்கள் மகளிா் உரிமைத் தொகை பெற்று வந்தனா். 2-ஆம் கட்டமாக 55,108 பெண்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 54,258 பெண்கள் பயன்பெற்றுள்ளனா் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மேயா் ந.தினேஷ்குமாா், துணை மேயா் ரா.பாலசுப்பிரமணியம், மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் இல.பத்மநாபன், கோவிந்தசாமி, திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் சிவபிரகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.