அவிநாசி: அவிநாசி அருகே விளைநிலங்களில் இரும்புக் கழிவுகள் கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் திங்கள்கிழமை சிறைப்பிடித்தனா்.
அவிநாசி வட்டம் வேட்டுவபாளையம் ஊராட்சிக்குள்பட்ட அசநல்லிபாளையத்தில் ஏராளமானோா் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்கின்றனா். இந்நிலையில் அப்பகுதியில் கொட்டுவதற்காக இரும்புக் கழிகளை லாரியில் ஏற்றிக் கொண்டுவந்தனா். இதை அறிந்த அப்பகுதி மக்கள், சமூக ஆா்வலா்கள் அந்த லாரியை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுதொடா்பாக சமூக ஆா்வலா்கள் கூறும்போது, அத்திக்கடவு தண்ணீா் மூலமாக குளம், குட்டைகள் நிறைந்து வருகின்றன். இதற்கிடையே இரும்புக் கழிவுகளைக் கொட்டப்படுவதால் கிணறுகள், விளை நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. இதன்மூலமாக பொதுமக்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உருவாகி வருகிறது.
இதுகுறித்து வருவாய்த் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினரிடம் தொடா்ந்து புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் சென்று இரும்புக் கழிவுகள் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.