திருப்பூா்: திருப்பூரில் முறையான திடக்கழிவு மேலாண்மையை மூன்று மாதங்களில் அமல்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக, நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநா் மதுசூதன் ரெட்டி தெரிவித்தாா்.
திடக்கழிவு மேலாண்மை குறித்த ஆய்வுக் கூட்டம், திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழக நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநா் மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். மேயா் என்.தினேஷ் குமாா், துணை மேயா் ஆா்.பாலசுப்ரமணியம், மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் மற்றும் சுகாதாரத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா். இந்தக் கூட்டத்தில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து செய்தியாளா்களிடம் நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநா் மதுசூதன் ரெட்டி கூறியதாவது:
திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட 60 வாா்டுகளிலும் பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் பணியாளா்களுடன் இணைந்து வீடுதோறும் குப்பை சேகரிப்புப் பணிகளை சீரமைப்பாா்கள். மட்கும், மட்காத குப்பை என தரம் பிரித்து வழங்க மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவாா்கள். அடுத்த 15 நாள்களில் இந்த நிலையை எட்ட இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல வீடுகளில் குப்பையை பிரித்து மேலாண்மை செய்யும் திட்டத்தை அடுத்த 3 மாதங்களில் செயல்படுத்தும் வகையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு ரூ.7.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குப்பை கொட்டுபவா்கள், தீ வைப்பவா்களை கண்காணிக்க கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும் என்றாா்.