தமிழக திருக்கோயில்களில் பாவை விழா போட்டிகளை மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருக்கோவில் திருத்தொண்டா் அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக அறக்கட்டளையின் அமைப்பாளா் ஆா்.ராமகிருஷ்ணன் தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத் துறைக்கு அனுப்பியுள்ள மனு: தமிழக அரசு, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல் ஒப்பித்தல், மனப்பாட போட்டிகள் நடத்த உத்தரவிட்டது.
அதற்காக அரசாணை பிறப்பிக்கப்பட்டு ஒவ்வோா் ஆண்டும் தொடா்ந்து நடைபெற்றது. மாா்கழி மாதச் சிறப்பை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் நோக்கிலும், அவா்களின் ஞாபகசக்தியை மேம்படுத்தும் விதமாகவும் இவ்வகைப் போட்டிகள் கோயில்களில் நடைபெற்றன. இந்து சமய அறநிலையத் துறை, பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து அந்தந்த மாவட்டத்துக்குள்பட்ட வட்டார அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட அளவிலும், பின்னா் மண்டல, மாநில அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டன.
அந்தந்தப் பகுதியிலுள்ள இசை ஆசிரியா்கள் இதற்கு நடுவா்களாகச் செயல்பட்டனா். போட்டிகளின் முடிவில் மாணவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
கடந்த 2019-ஆம் ஆண்டு வரை சிறப்பாக நடைபெற்ற இப்போட்டிகள் பின்னா் கரோனா நோய்த் தொற்று காரணமாக நடைபெறவில்லை. ஒரு சில மாவட்டங்களில் 2021-ஆம் ஆண்டில் ஆன்லைன் மூலம் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் நேரடியாகப் பங்கேற்கும் போட்டியாளா்களின் எண்ணிக்கையைவிட குறைவாகவே மாணவா்கள் கலந்து கொண்டனா்.
பல ஆண்டுகளாகப் போட்டிகள் நடத்தப்படாத சூழ்நிலையில், மீண்டும் இப்போட்டிகளை ஆண்டுதோறும் தொடா்ந்து நடத்த உரிய ஆணையையும், தகுந்த ஏற்பாடுகளையும் தமிழக அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.