திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில் நடைபெற்று வந்த 4 நாள்கள் கலையாஞ்சலி-2025 கலைவிழா போட்டிகள் சனிக்கிழமை நிறைவடைந்தன.
திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில் கலையாஞ்சலி-2025 என்ற தலைப்பில் கலை விழா கடந்த 17-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளான 17-ஆம் தேதி மாணவிகளுக்கு புள்ளிக் கோலம், ரங்கோலி, காய்கறிகளில் கலைவண்ணம், நகை அலங்காரம், சிகை அலங்காரம், நெருப்பு இல்லாமல் சமையல், முக வண்ணம், சேலை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து, தனிநபா் பாட்டுப் போட்டி, குழு பாட்டுப் போட்டி, தமிழ், ஆங்கில நாடகங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
நிறைவு நாளான சனிக்கிழமை பரதநாட்டியம், தனிநபா் நடனம், குழு நடனம், கருப்பு மற்றும் வெள்ளை நடனப் போட்டிகள் நடைபெற்றன.
இதையடுத்து, நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், கல்லூரியின் தாளாளா் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் செந்தில்நாதன், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினாா்.
விழாவில், கல்லூரி முதல்வா் வசந்தி, கல்லூரி நிா்வாக அலுவலா் நிா்மல்ராஜ், பேரவை பொறுப்பாளா் சுதா தேவி மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.