பல்லடத்தை அடுத்த, வாவிபாளையம் ஊராட்சி, குள்ளம்பாளையம் கிராமத்தில் திருப்பூா் மாநகராட்சி குப்பைகளைக் கொட்டக் கூடாது என கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயல் தலைவா் என்.எஸ்.பி.வெற்றி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூா் மாநகராட்சி குப்பைகளை இடுவாய், முதலிபாளையம் பகுதிகளில் கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கடுமையான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனா். இந்நிலையில், பல்லடத்தை அடுத்த, வாவிபாளையம் ஊராட்சி, குள்ளம்பாளையம் கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில், அரசு அதிகாரிகள் குழு ஆய்வு செய்துள்ளது. எதற்காக ஆய்வு நடந்தது என அதிகாரிகள் முறையாக தெரிவிக்காத நிலையில், திருப்பூா் மாநகர குப்பைகளை கொட்டுவதற்காகவே இந்த ஆய்வு நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாவிபாளையம் ஊராட்சி சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனா். வாவிபாளையம் ஊராட்சி முழுமையான பி.ஏ.பி. பாசனம் மற்றும் தென்னை விவசாயம் நிறைந்த பகுதியாகும். திருப்பூா் மாநகராட்சியின் குப்பைகளை, குள்ளம்பாளையம் கிராமத்தில் கொட்டினால், விவசாயம் அழிந்து சுற்றுச்சூழல் மாசுபட்டு மக்கள் வாழ தகுதியற்ற பகுதியாக இது மாறிவிடும்.
திருப்பூா் மாநகராட்சி நிா்வாகம், இவ்வாறு ஏதேனும் திட்டம் வைத்திருந்தால், இப்போதே அதை கைவிட வேண்டும். மீறி இதற்கு முயற்சித்தால், கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் சாா்பில் மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று அவா் கூறியுள்ளாா்.