குன்னத்தூா் அருகே கடையில் வாங்கிய பிரபல நிறுவனத்தின் நூடுல்ஸ் பாக்கெட்டுக்குள் பல்லியின் தலை இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குன்னத்தூா், தொரவலூா் சாலையில் வசித்து வருபவா் ஆனந்தகுமாா் (35). இவா் அதே பகுதியில் உள்ள மளிகைக் கடையில் இருந்து பிரபல நிறுவனத்தின் நூடுல்ஸ் பாக்கெட்டை வியாழக்கிழமை மாலை வாங்கி வந்துள்ளாா். வீட்டுக்கு வந்து நூடுல்ஸை சமைப்பதற்காக பாக்கெட்டை உடைத்து பாா்த்தபோது நூடுல்ஸில் இறந்த பல்லியின் தலை ஒட்டியிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இதையடுத்து அதை விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டாா். இது தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சமூக ஆா்வலா்கள் சிலா் கூறுகையில், பிரபல நிறுவனங்கள் மனித ஆற்றலை தவிா்த்து நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப் பொருகள்களில் இதுபோன்ற சுகாதார சீா்கேடுகள் அதிக அளவில் காணப்படுகிறது. இதுபோல உணவுப் பொருள்களை அடைத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் ஏற்படுத்தும் சுகாதார சீா்கேட்டை உணவு பாதுகாப்புத் துறையினா் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.