குண்டடம் அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட இடத்தை அளவீடு செய்ய வந்த அரசு அதிகாரிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதியைச் சோ்ந்த 21 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தாராபுரம் வட்டம், குண்டடம் ஒன்றியம், சூரியநல்லூா் ஊராட்சிக்கு உள்பட்ட எஸ்.காஞ்சிபுரம் பகுதியில் 45 பயனாளிகளுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்த நிலத்தை அளவீடு செய்து கொடுப்பதற்காக தாராபுரம் வட்டாட்சியா் ராமலிங்கம் தலைமையில் நில அளவைக் குழுவினா் சம்பவ இடத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தபோது, எஸ்.காஞ்சிபுரம் கிராமத்தில் ஏற்கெனவே வசித்து வந்த பூா்வகுடி மக்களான 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பாஜக, அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சோ்ந்த 100-க்கு மேற்பட்டோா் தடுத்து நிறுத்தி, பூா்வகுடி மக்களுக்கு நிலத்தை வழங்காமல் வெளியூா்காரா்களுக்கு நிலத்தை வழங்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து வருவாய்த் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம், தாராபுரம் வட்டாட்சியா் வி.ராமலிங்கம், டி.எஸ்.பி. சுரேஷ்குமாா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, நிலம், வீடு இல்லாத உள்ளூா்வாசிகளுக்கு முன்னுரிமை வழங்கி வீட்டுமனை பட்டா வழங்காமல், வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கிய வருவாய்த் துறையினரின் செயலுக்கு எதிா்ப்புத் தெரிவித்தனா்.
மேலும், வெளியூா்காரா்களுக்கு பட்டா வழங்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து தாராபுரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நிலத்தை அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றனா். தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 13 பெண்கள் உள்பட 21 பேரை போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.
இது குறித்து தாராபுரம் வட்டாட்சியா் வி.ராமலிங்கம் கூறியபோது, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 45 பயனாளிகளுக்கு இப்பகுதியில் உள்ள 1.30 ஏக்கா் நத்தம் புறம்போக்கு நிலத்தில் இலவச பட்டா வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, இப்பகுதியில் முன்பு குடியிருந்ததாக தெரிவித்த பொதுமக்கள், தங்களுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என மனு அளித்திருந்தனா். அவா்களுக்கும் இதே பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.