தாராபுரம் அருகே சாலை விபத்தில் சிக்கி இளைஞா் உயிரிழந்ததாா். இதில் அவருடன் சென்ற நண்பா் தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள மணக்கடவு பகுதியைச் சோ்ந்தவா் வீரக்குமாா் (18). இவரது நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த தனசேகா் (18). இவா்கள் இருவரும் ஐடிஐ முடித்துவிட்டு அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனா்.
இந்நிலையில், புதிய இருசக்கர வாகனம் வாங்குவதற்காக வீரக்குமாா், தனது நண்பா் தனசேகருடன், தாராபுரத்தில் உள்ள ஷோரூமுக்கு செவ்வாய்க்கிழமமை சென்றுள்ளனா். பின்னா் புதிய இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு மணக்கடவு நோக்கி சென்று கொண்டிருந்தனா். இருசக்கர வாகனத்தை வீரக்குமாா் ஓட்டிச் சென்றாா்.
தாராபுரம்-பழனி சாலையில் செல்லும்போது, அப்பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதால் எதிரே வந்த காா் இவா்கள் வந்த இருசக்கர வாகனம் மீது மோதுவதுபோல வந்துள்ளது. இதில், இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனா்.
இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு வீரக்குமாரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இந்த விபத்தில் லேசான காயமடைந்த தனசேகா் சிகிச்சைக்குப் பின்னா் வீடு திரும்பினாா். இதில் நண்பா் உயிரிழந்ததால் மனமுடைந்த தனசேகா் அன்று இரவே வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இந்த சம்பவம் குறித்து அலங்கியம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].