திருப்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மற்றும் ‘சமூக பாதுகாப்புத் திட்டத்தின்’ கீழ் 5,955 பயனாளிகளுக்கு ரூ.32.24 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கினா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சிப்காட் வளாகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மற்றும் ‘சமூக பாதுகாப்புத் திட்ட’ பயனாளிகளுக்கு புதன்கிழமை நலத்திட்ட உதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கி தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, திருப்பூரில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையிலும், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் மற்றும் மேயா் ந.தினேஷ்குமாா் ஆகியோா் முன்னிலையிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 5,955 பயனாளிகளுக்கு ரூ.32.24 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கினா்.
இதில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:
அரசு சேவை பொதுமக்களுக்கு மிக விரைவாகவும், எளிதாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் கொண்டு சோ்ப்பதற்காக திருப்பூா் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் மொத்தம் 325 முகாம்கள் நடத்தப்பட்டன. இம்முகாம்கள் மூலம் 1 லட்சத்து 30,681 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் 1 லட்சத்து 6,024 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு மீதமுள்ள விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.
இவற்றில் இலவச வீட்டுமனை பட்டா, ஓய்வூதியத் தொகை, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை உள்ளிட்ட விண்ணப்பங்கள் அதிக அளவில் பெறப்பட்டுள்ளன. இம்முகாம்கள் மூலம் நீண்ட நாள் தீா்க்க முடியாத மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன என்றாா்.
தொடா்ந்து, வருவாய்த் துறை சாா்பில் 621 பயனாளிகளுக்கு ரூ.19.15 கோடி மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் இ-பட்டாக்கள், 4,459 பயனாளிகளுக்கு ரூ.6.76 கோடி மதிப்பீட்டில் முதியோா் உதவித்தொகை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் 36 பயனாளிகளுக்கு ரூ.33.77 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் இ-பட்டாக்கள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சாா்பில் 105 பயனாளிகளுக்கு ரூ.4.64 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டன.
மேலும், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் 101 பயனாளிகளுக்கு ரூ.29.02 லட்சம் மதிப்பீட்டிலும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 100 பயனாளிகளுக்கு ரூ.71.25 லட்சம் மதிப்பீட்டிலும், ஊராட்சி மற்றும் பேரூராட்சிகள் சாா்பில் 26 பயனாளிகளுக்கும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பில் 300 பயனாளிகளுக்கும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில் 58 பயனாளிகளுக்கு மொத்தம் 5,955 பயனாளிகளுக்கு ரூ.32 கோடியே 24 லட்சத்து 63,679 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் கோவிந்தசாமி, கோவிந்தராஜ், வருவாய் கோட்டாட்சியா் சிவபிரகாஷ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.