திருப்பூரில் கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகளுக்காகப் போராடியவா்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறுவதுடன், அவா்களை விடுதலை செய்ய முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்று மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூா் மாவட்டத்தில் கறிக்கோழி நிறுவனங்களுக்கு குஞ்சு வளா்த்துக் கொடுக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை உயா்த்திக் கொடுக்க வேண்டும் என்று குஞ்சு வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், கறிக்கோழி நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்து தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி தலைமையில் பல்லடத்தில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில், ஈசன் முருகசாமி உள்பட 10 போ் கடுமையான சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து, அவா்கள் கைது செய்யப்பட்டு வேலூா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
அவா்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறுவதுடன், அவா்கள் அனைவரையும் விடுதலை செய்ய முதல்வா் உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.