வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்திஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மறியல்
வேளாண சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தருமபுரியில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 7 பெண்கள் உள்பட 45 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வேளாண சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தருமபுரியில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 7 பெண்கள் உள்பட 45 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தருமபுரி நான்கு முனைச் சாலை சந்திப்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்கள், தேசிய மின்சார திருத்தச் சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இதேபோல, புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு மசோதா ஆகியவற்றை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது. தருமபுரி மாவட்டத்தில் காவிரி மிகை நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். சிப்காட் தொழிற்பேட்டையில் தொடங்கி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் எஸ்.தேவராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த மறியலில் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.சின்னசாமி, எம்.மாதேஸ்வரன், ஏ.கந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 7 பெண்கள் உள்பட 45 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதேபோல, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் பகுதிகளிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது.