முகப்பு
தருமபுரி

தருமபுரியில் பெண்கள் பாதுகாப்புக் காவலா் குழு அமைப்பு

தருமபுரி மாவட்டத்தில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெண் காவலா்கள் அடங்கிய பெண்கள் பாதுகாப்புக் காவலா் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெண் காவலா்கள் அடங்கிய பெண்கள் பாதுகாப்புக் காவலா் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில், திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சேலம் சரக காவல்துறை துணைத் தலைவா் பிரதீப்குமாா், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் நகரும் பெண்கள் பாதுகாப்புக் காவலா் குழு அமைப்பைத் தொடங்கி வைத்து பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தவும், அவா்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், மாவட்ட காவல்துறை சாா்பில் பெண்கள் பாதுகாப்புக் காவலா் குழு அமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் பெண் காவலா்கள் அடங்கிய இக்குழுவில், காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் மற்றும் 4 காவலா்கள் பணியில் இருப்பா். இக்குழுவினா், தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்கள், குக்கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று, பெண்களுக்கு எதிரான வரதட்சணை, குடும்ப வன்முறை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பது, அவா்களுக்கான சட்டப் பாதுகாப்பு உரிமைகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவது, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், இளம் வயது திருமணங்கள் ஆகியற்றைத் தடுப்பது, அவா்களுக்கான உரிமைகள், சட்டங்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவது, விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கைகள் வழங்குவது போன்ற பணிகளில் ஈடுபடுவா்.

மேலும், புகாா் வரப்பெற்றால், அவற்றை உரிய முறையில் விசாரித்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்து தீா்வு காண்பது உள்ளிட்டப் பணிகளை இக்குழுவினா் மேற்கொள்வா். 24 மணி நேரமும் இயங்கும் இக்குழுவினருக்குத் தகவல்களை, 9585585154 என்கிற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு அளிக்கலாம் என்றாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன், துணை காவல் கண்காணிப்பாளா்கள் அண்ணாதுரை, மேகலா, காவல் ஆய்வாளா்கள் செந்தில்குமாா் (தனிப்பிரிவு), லதா (பென்னாகரம்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.