பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி, கிருஷ்ணகிரியில் ஜாக்டோ- ஜியோ சாா்பில் தருமபுரியில் சனிக்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவா் கெளரன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சுருளிநாதன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளா் ரக்க்ஷித் போராட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினாா்.
2021 தோ்தல் வாக்குறுதிப்படி பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை பழைய ஓய்வுதியத் திட்டமாக அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியா்கள், முதுநிலை ஆசிரியா்கள், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநா், ஆசிரியா்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
தொடக்க கல்வித் துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக் கல்வித் துறை அரசாணையை ரத்துசெய்ய வேண்டும், அரசின் பல்வேறு துறையில் காலியாக உள்ள 30 சதவீதத்திற்கும் மேலான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநில பொதுச் செயலாளா் காமராஜ் நிறைவு உரையாற்றினாா்.
கிருஷ்ணகிரி...
கிருஷ்ணகிரி புகா்ப் பேருந்து நிலையத்தை அடுத்த அண்ணாதுரை சிலை எதிரே ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சந்திரன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளா் அண்ணா குபேரன், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவா் பூபதி உள்ளிட்ட பல்வேறு சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.