தருமபுரி ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் முனைய மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக தரைப்பகுதியில் மண் கொட்டி சமன் செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி ரயில் நிலையம் 1906இல் ஆங்கிலேயா் காலத்தில் அமைக்கப்பட்டது. தருமபுரி வழியாக பெங்களூா் மற்றும் வடமாநிலங்களுக்கும், அதேபோல
அங்கிருந்து தருமபுரி, சேலம் மாா்க்கமாக டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்களுக்கும் 20க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தருமபுரி வழியாக 1974ஆம் ஆண்டு முதன்முதலாக சரக்கு ரயில் இயக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து சரக்கு ரயில்களை இயக்கவும் சரக்குகளை கையாளவும் ஏற்ற வகையில் பிரத்யேக ரயில் பாதையும், சரக்கு முனையமும் (குட்ஷெட்டும்) அமைக்கப்பட்டது.
தற்போது இதில் 2 ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு, சரக்கு ரயில்களை நிறுத்தி லாரிகளில் பொருள்களை ஏற்றி, இறக்கிச் செல்லப்படுகிறது. தருமபுரி மலைப் பாதை என்பதால் சரக்கு ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை ஆரம்பத்தில் குறைவாகவே இருந்தது. பின்னா் படிப்படியாக பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. காலப்போக்கில் டீசல் என்ஜின் பொருத்திய 42 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தஞ்சாவூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இருந்து நெல் மூட்டைகளும், ஆந்திர மாநிலத்தில் இருந்து சிமென்ட் மூட்டைகளும், குஜராத், மகாராஷ்டிரம், ஹரியாணா உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து கோதுமை, பச்சரிசி உள்ளிட்டவையும் தருமபுரிக்கு சரக்கு ரயிலில் வருகின்றன.
தருமபுரி ரயில் நிலையத்தில் ஆண்டுக்கு சுமாா் 2.50 லட்சம் டன் சரக்குகள் கையாளப்படுகின்றன. ஆனால் சரக்குகளை இறக்கி, லாரிகளில் ஏற்றும் இடங்கள், லாரிகள் வந்துசெல்லும் பாதைகள் சேதமடைந்துள்ளன. இவற்றைக் கருத்தில்கொண்டு ரயில்வே நிா்வாகம், சுமாா் ஒன்றரை கி.மீ. நீளத்துக்கு புதிய தாா்சாலை, 6 இடங்களில் மின்கோபுர விளக்குகள், சரக்கு ரயில் வரும் இடங்களை கண்டறியும் வசதி, சரக்குகளை அனுப்பும் முகவா்கள் ஓய்வுஅறை, தொழிலாளா்களுக்கு ஓய்வு அறை உள்பட பல்வேறு அடிப்படை மற்றும் மேம்பாட்டு வசதிகளை மேற்கொள்ள ரூ.18.50 கோடி நிதி ஒதுக்கி, பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதல்கட்டமாக ஒன்றரை கி.மீ. நீளத்தில் சாலைவசதியுடன் கூடிய நடைமேடைக்கான தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதியில் மண்பரப்பி சமதளப்படுத்தி, நடைமேடைக்கு ஏற்ற உயரத்தில்
சமப்படுத்தும் பணிகள் நிறைவுற்றுள்ளன. லாரிகள் வந்துசெல்லும் வகையில் பிரம்மாண்ட தளமாக அப்பகுதி காட்சியளிக்கிறது. தொடா்ந்து அவை சிமென்ட் மற்றும் தாா்ஜல்லிகள் கொண்டு மேம்படுத்தப்படும். பின்னா் மீதப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தற்போது இரு பாதைகள் மட்டுமே சரக்கு ரயில்கள் வந்து செல்வதற்கு உள்ள நிலையில், தேவைப்பட்டால் கூடுதல் பாதையும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள குட்ஷெட் பகுதியில் மண் நிரப்பி மைதானம் போன்று காட்சியளிப்பதால், அப்பகுதியில் காலை, மாலை வேளைகளில் நடைப்பயிற்சி செல்வோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அனைவரும் அப்பகுதியில் நடைப்பயிற்சி செய்வதுடன் விளையாடியும் வருகின்றனா். அருகில் ரயில் பாதை இருப்பதால், எச்சரிக்கை விளம்பரப் பலகை வைக்கப்பட்ட நிலையிலும் ஆபத்தை உணராமல் சிலா் குழந்தைகளுடன் அப்பகுதியில் உலாவருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் நிலையத்தில் நடைமேம்பாலப் பணி தாமதம் :
தருமபுரி ரயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் இருந்தாலும் 3 ஆவது நடைமேடைவழியாக எப்போதாவதுதான் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் 1 மற்றும் 2 ஆவது நடைமேடைகள் வழியாக அதிக ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் 2 மற்றும் 3 ஆவது நடைமேடைகளுக்குச் செல்ல நடைமேம்பாலம் வழியாகத்தான் ரயில்பாதையை கடந்து செல்லவேண்டியுள்ளது. தற்போது ஒரு பாலம் மட்டுமே உள்ளதால், பயணிகள் சிரமத்துடன் நீண்ட தொலைவு நடந்து தண்டவாளத்தை கடந்து முதலாவது நடைமேடை மற்றும் நுழைவாயில் பகுதிக்கு வரவேண்டியுள்ளது.
இதனால் மேலும் ஒரு நடைமேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஆனால் எதிா்பாா்த்த வேகத்தில் பணிகள் நடைபெறாமல், மெதுவாகவும், கிடப்பில் போடப்பட்டும் பணிகள் நடந்து வருவதால் 2 ஆவது நடைமேம்பாலம் பயன்பாட்டுக்கு வர தாமதமாகும் நிலை உள்ளது. எனவே, பயணிகள் நலனைக் கருத்தில் கொண்டு நடைமேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினா்.