ஒகேனக்கல் வனப் பகுதியில் சமையல் செய்வதை தடுக்க வலியுறுத்தல்
ஒகேனக்கல் வனப் பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகள் அத்துமீறி நுழைந்து சமையல் செய்வதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு கோடை விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பென்னாகரம் அருகே மடம் சோதனைச்சாவடி பகுதியில் இருந்து சுமாா் 12 கி.மீ தொலைவு அடா்ந்த வனப்பகுதிக்குள் செல்ல வேண்டி உள்ளது.
இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகளின் உணவுப் பொருள்களை வாங்கி கொண்டு வனப் பகுதிக்குள் சென்று உணவு சமைத்து உண்பது அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வனப் பகுதியில் தீயிட்டு சமைப்பதால் வனப் பகுதியில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், வனவிலங்குகள் தண்ணீா் தேடி அவ்வப்போது வனப் பகுதியை ஒட்டியுள்ள சாலைகளுக்கு வருவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், வனப் பகுதிக்குள் மது அருந்துவது அதிகரித்துள்ளது.
Advertisement
இவற்றை வனத் துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.