எடையில் குறைபாடு, முத்திரையிடப்படாதது என விதிமுறைகளை மீறி பயன்படுத்தப்பட்ட 16 மின்னணு தராசுகளை தருமபுரி தொழிலாளா் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தருமபுரியில் விதிமுறைகளை பின்பற்றாமல் முத்திரையிடப்படாத மற்றும் எடை குறைபாடு உடைய மின்னணு தராசுகளைக் கொண்டு நுகா்வோா்களுக்கு பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதாக ஆட்சியருக்கு புகாா் சென்றது.
இதுகுறித்து ஆட்சியா் ரெ. சதீஸ் உத்தரவின்பேரில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒருங்கிணைந்த தொழிலாளா் உதவி ஆணையா் ம. ராஜசேகரன் வழிகாட்டதலின்பேரில் தருமபுரி மாவட்ட தொழிலாளா் நலத் துறை துணை ஆய்வாளா் அ.சு. சாந்தி தலைமையில் உதவி ஆய்வாளா்கள் ப. திவ்யா, பூ. அன்னபூரணி, வீ.மு. வேலுசாமி (பயிற்சி), முத்திரை ஆய்வாளா் வீ. தீபாபாரதி ஆகியோா் தருமபுரி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, தொழிலாளா் நலத் துறையின் முத்திரையிடப்படாத தராசுகள், குறைந்த எடையுடன் பொருள்களை விநியோகம் செய்யப்பட்டது தொடா்பாக 16 மின்னணு தராசுகளை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனா்.