தருமபுரியில் ஜவுளிக் கடையில் பணிபுரிந்த 17 வயது சிறுவனை தொழிலாளா் நலத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
தருமபுரி நகரில் பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளில் உள்ள வணிக வளாகங்கள், கடைகளில் தருமபுரி தொழிலாளா் துணை ஆய்வாளா் சாந்தி தலைமையில், தொழிலாளா் உதவி ஆணையா் ராஜசேகரன், முத்திரை ஆய்வாளா் தீபா பாரதி, உதவி ஆய்வாளா்கள் காா்த்திக், வேலுசாமி, காவல் துறை, கல்வித் துறை, மாவட்ட குழந்தைத் தொழிலாளா் பாதுகாப்பு அலுவலகப் பணியாளா்கள், சைல்டு லைன் அலுவலகப் பணியாளா்கள் கூட்டாக ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, ஒரு ஜவுளிக் கடையில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுவனை மீட்ட தொழிலாளா் நலத் துறை அலுவலா்கள் விதிமுறைகளுக்கு உள்பட்டு சைல்டு லைன் அமைப்பினரிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து 18 வயதுக்கு உள்பட்ட சிறாா்களை பணியில் அமா்த்துவது சட்டப்படி குற்றமாகும் என கடை உரிமையாளா்களுக்கு அலுவலா்கள் அறிவுறுத்தினா்.